சுவர் இடுக்கில் சித்திரம்:

மழலையர் இல்லம்
உறவற்ற கூட்டம்
அதுவே என் உலகம்..
பட்டும் படாத தொட்டும் தொடாத
மீசையும் மண்ணும் போல..

எதிர் வீட்டு ராணி அவள்,
அவ்வப்போது சுவர் இடுக்கில்
அவதரிப்பாள்.. ஆதரிப்பாள்..

அங்கே வளரும் குட்டி நாய் தவ்வும்,
வீசிய ரொட்டித்துண்டை கவ்வும்..

தொட்டிச் செடிகள் பூத்துக் குலுங்கும்,
தினந் தோறும் சேரும் நீரும் அருந்தும்..

வாகனமோ பளிச்சென்று மின்னும்,
தினமும் காலை நீராடும்..

வாசல் தாண்டிய அன்பே
வாய் பிளக்கும் படி..

படி தாண்டி உள் சென்றால்
எத்தனை தானோ இன்பமடி !!

என் ஆறாத காயம் அது ஆகாய நீளம்,
மாறாத சோகம் அது மயான யோகம்..

இடுக்கில் தெரிந்த முகமோ,
இடுக்கண் விலக்க வருமோ..

உன் கைகோர்த்து கை வீச காற்றே வீசும்,
காற்றெங்கும் இன்பக் கண்ணீர் வாசம் வீசும்..

வருவாயா வரம் தருவாயா ?
காலச் சக்கரம் மின்னல் வேகம் சுழலட்டும்,
நான் உன் வாசல் வந்து சேரும் வரை.
பின்பு யுகங்கள் உறையட்டும் !!

Leave a comment