கண்முன்னே நீண்ட நெடிய வளைந்து நெளிந்த பாதை,
உள்ளங்கால் அடியில் முக்கிய தசை நார் கிழிந்து தொங்க,
காலை சிரட்டிக் கொண்டே ரத்தம் சொட்டச்சொட்ட நகர,
சில வாகனங்கள் அதி வேகத்தில் என்னைத் துரத்தி வர,
திக்குத்தெரியாமல் தெற்கு வடக்காய்த் திரிய,
மாயமாய் தோன்றிய வரிக்குதிரை ஒன்றின் மேல்
தட்டுத்தடுமாறி ஏறி வலம் வர,
அது திடீரென மாயமென மறைந்து போக,
யார் கண்ணிலும் படாமல் மருகி மருகி உதவி தேட,
வைத்தியர் ஒருவர் திண்ணை மேல் தெரிய,
தையல்கள் போட முனைய,
என்னுள் ஆயிரம் கேள்விகள் – தையல்கள் உதவுமா,
தசை தான் இன்னுமொரு முறை வலி தாங்குமா,
சிகிச்சைக்கு கையில் இருக்கும் சொர்ப்பக்காசு பற்றுமா.
அகம் தோன்றிய கேள்விகளை என் முகம் சொல்ல,
அவரோ என் கால் தான் காசை விட முக்கியம் என்று,
மெதுவாய் தையல் இட்டு, கடன் எழுதி வைத்துக் கொள்ள,
மருத்துவ தர்மம்தனை கடைபிடிக்க,
இரு கை கூப்பி வணங்கி விடை பெற, கடந்த நேரத்தை சரி செய்ய,
சற்றே வேகம் பிடிக்க, தசை நார் கிழிய,
உயிரே போகும் வலியில் வாய் விட்டுக்கதற…
கல்லூரி விடுதியில் உறக்கம் கலைந்த என் நண்பன் –
“டேய் என்னடா ஆச்சு? ஏன் இப்டி கத்துற ?” -என்று என்னைத்தட்டி எழுப்ப, கண் விழித்தேன்.
“ச்ச….. கனவா ??!! நெஜம் ன்னு நெனச்சு பயன்டேண்டா மச்சான்.”
“கனவா ? பயமா ? என்ன டா நடஞ்சு ?”
ஆ முதல் ஃ வரை தெள்ளத்தெளிவாக சொல்லி முடிக்க;
“ஏன்டா இப்டிலாம் ஒரு கனவு எனக்கு வரணும்? ஏன்டா ஏன்ன்ன்ன்ன்ன் ?”
நீண்ட நேரம் யோசித்த படியே – அவன் நீண்ட கூந்தலை அள்ளி முடிக்க ;
“சனியனே !! இது என்னனு நா சொல்றேன்!
நேத்து சாயங்காலம் மவுண்ட் ரோட்ல போம்போது –
உன் பழைய செருப்பு மறுபடியும் பிஞ்சு போச்சு.
பிஞ்ச செருப்ப போட்டே ரொம்ப நேரம் நடந்து போன.
அந்த பிஸி டைம்ல பிஞ்ச செருப்போட ரோடு எப்படி கிராஸ் பண்றதுனு தெரியாம முழிச்சு அப்றம் ஸிப்ரா கிராஸ்ஸிங்ல கிராஸ் பண்ண.
யாராச்சு பாத்தா அசிங்கம் ஆயிடும்னு யாருக்கும் தெரியாமசைலெண்டா அங்க இங்க பாத்த.
கிராஸ் பண்ண உடனே செருப்பு தெக்கிற ஒருத்தர் இருந்தார் .
அவர் தெக்க்கலாம்னு செருப்ப எடுத்தப்போ. நீ அவர்கிட்ட நெறய கேள்வி கேட்ட. இது ரொம்ப பழைய செருப்பு. தச்சு தச்சு இத்துப்போன செருப்பு.இன்னும் தையல் போட்டா தாங்குமா. அப்புறம் தெக்கிறதுக்கு எவ்ளோ காசு.அப்டி இப்டினு.
அவர் 5 ரூபாய் கேட்டதுக்கு 3 ருபாய் தான் இருக்குனு சொன்ன டா மூதேவி . ஏதோ அந்த மனுஷன் உன் மூஞ்சி பாத்த மூணு நாளா சோறு சாப்டாதவன் மாறி பாவமா இருக்கு – போன போதுனு ஃ பிரீயா தெச்சு குடுத்தாரு.
செருப்போட நிலைமை தெரிஞ்சும் நாதாரி நீ உடனே ஓடுனா செருப்பு பிய்யாம என்ன பண்ணும் ? ஒடன்னே பல்ல காட்டிருச்சு. திரும்ப அவர்ட போனா அந்த பிஞ்ச செருப்லே அடிப்பாருனு ரூம் கு திரும்பி வன்ட.
இது தான் உன் கனவுல பயங்கர எடிட்டிங்கோட வந்துருக்கு. போதுமா? இப்போ புரிதா ?? பைல 5 ரூபா இல்லாத நாயி 5 மணிக்கு என் தூக்கத்த கெடுக்குது !! மூடிட்டு தூங்கு !! ஹாஸ்டல் சேர்ற கியூல ஜஸ்ட் உனக்கு பின்னாடி நின்னேன் பாரு . எல்லாம் என் தலை எழுத்து.”