எதிர்மறையாகவே எண்ணி,
விதியை வெறுத்து ,
உடலை உருக்கி ,
கூடாகவே குறைந்து ,
இளமையை இகழும்
20 வயது கிழவன் அவன் .
மலை அழுத அருவி ஆறாகி ஓட , அதில்
அவன் இரையாக உள் இறங்கினான்.
ஆற்றங்கரையில் தன்னையே கரைக்க ,
அள்ளி முடிந்த கூந்தல் மிதக்க ,
நினைவலைகள் அவனை அடிக்க.
கூந்தலை பார்த்த படியே;
“பல நண்பர்கள் மடிந்து மண்ணில் விழுந்தாலும்
ஒற்றை காலில் பிடிப்புடன் நிற்பாயே !
சில நேரங்களில் உடனிருப்போர் நிறம் மாறினாலும்
நீ மாறாமல் எதிர்ப்பு தெரிவிப்பாயே !
வெட்ட வெட்ட மடிந்து போகாமல்
கரு கரு வென்று வளர்வாயே !
உயரச்சென்றாலும் வேர் மறக்காமல்
அடக்கம் காப்பாயே !
வளைந்து கொடுத்தால் தான் வளர்ச்சி
என்று வளைந்து நெளிந்து இருப்பாயே !
இத்தனை வாழ்க்கைப்பாடம் சொல்லி
ஊக்கு விற்கும் என்னை ஊக்குவித்தாயே !
நீரோடையில் நீர் ஓடையில்
நீர் போல் என் மனம் தெளிந்தேன்”.
புத்துணர்ச்சியோடு மனக் கறை நீங்கி
ஆற்றங்கரையில் வலது கால் எடுத்து வைத்தான்.